×

எபிரெயர் : 2

  • 1 : ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
  • 2 : ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,
  • 3 : முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
  • 4 : அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
  • 5 : இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
  • 6 : ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
  • 7 : அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
  • 8 : சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.
  • 9 : என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
  • 10 : ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
  • 11 : எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
  • 12 : உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
  • 13 : நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.
  • 14 : ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
  • 15 : ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
  • 16 : ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.
  • 17 : அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
  • 18 : ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.