லூக்கா : 1

  • 1 : மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
  • 2 : ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
  • 3 : ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
  • 4 : அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
  • 5 : யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
  • 6 : அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
  • 7 : எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.
  • 8 : அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
  • 9 : ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
  • 10 : தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
  • 11 : அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
  • 12 : சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
  • 13 : தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
  • 14 : உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
  • 15 : அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
  • 16 : அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
  • 17 : பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
  • 18 : அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
  • 19 : தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
  • 20 : இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
  • 21 : ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
  • 22 : அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
  • 23 : அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.
  • 24 : அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
  • 25 : எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
  • 26 : ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
  • 27 : தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
  • 28 : அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
  • 29 : அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
  • 30 : தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
  • 31 : இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
  • 32 : அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
  • 33 : அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
  • 34 : அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
  • 35 : தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
  • 36 : இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
  • 37 : தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
  • 38 : அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
  • 39 : அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
  • 40 : சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
  • 41 : எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
  • 42 : உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
  • 43 : என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
  • 44 : இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
  • 45 : விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
  • 46 : அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
  • 47 : என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
  • 48 : அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
  • 49 : வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
  • 50 : அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
  • 51 : தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
  • 52 : பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
  • 53 : பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
  • 54 : நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
  • 55 : தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
  • 56 : மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
  • 57 : எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
  • 58 : கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.
  • 59 : எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
  • 60 : அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
  • 61 : அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
  • 62 : அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
  • 63 : அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
  • 64 : உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
  • 65 : அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
  • 66 : அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
  • 67 : அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
  • 68 : இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
  • 69 : அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
  • 70 : தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
  • 71 : உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
  • 72 : அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
  • 73 : ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
  • 74 : தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
  • 75 : தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.
  • 76 : நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
  • 77 : நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.
  • 78 : அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
  • 79 : நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
  • 80 : அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
மேல்