×

ரோமர் : 9

  • 1 : எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
  • 2 : நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
  • 3 : மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே.
  • 4 : அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
  • 5 : பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
  • 6 : தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
  • 7 : அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே.
  • 8 : அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
  • 9 : அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.
  • 10 : இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
  • 11 : பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
  • 12 : மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
  • 13 : அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
  • 14 : ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
  • 15 : அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மெல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
  • 16 : ஆகையால் விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிறதேவனாலேயாம்.
  • 17 : மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
  • 18 : ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
  • 19 : இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
  • 20 : அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
  • 21 : மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
  • 22 : தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
  • 23 : தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
  • 24 : அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
  • 25 : அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
  • 26 : நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
  • 27 : அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
  • 28 : அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
  • 29 : அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
  • 30 : இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
  • 31 : நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
  • 32 : என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
  • 33 : இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.