×

யாத்திராகமம் : 37

  • 1 : பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
  • 2 : அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
  • 3 : அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
  • 4 : சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
  • 5 : அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
  • 6 : கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.
  • 7 : தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,
  • 8 : ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.
  • 9 : அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
  • 10 : மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
  • 11 : அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
  • 12 : சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,
  • 13 : அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
  • 14 : அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
  • 15 : மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
  • 16 : மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
  • 17 : குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
  • 18 : குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
  • 19 : ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
  • 20 : விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
  • 21 : அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறுகிளைகளுக்கும் அப்படியே இருந்தது.
  • 22 : அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.
  • 23 : அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.
  • 24 : அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.
  • 25 : தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏக வேலைப்பாடாயிருந்தது.
  • 26 : அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டுபண்ணி,
  • 27 : அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
  • 28 : சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
  • 29 : பரிசுத்த அபிஷேகதைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.