ஏசாயா : 29

  • 1 : தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
  • 2 : அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.
  • 3 : உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன்.
  • 4 : அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.
  • 5 : உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.
  • 6 : இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.
  • 7 : அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.
  • 8 : அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்துத் தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.
  • 9 : தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறுத்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.
  • 10 : கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.
  • 11 : ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.
  • 12 : அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.
  • 13 : இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
  • 14 : ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
  • 15 : தாங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!
  • 16 : ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கின வரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
  • 17 : இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல் வெளியாக மாறும்; செழிப்பான வயல் வெளி காடாக எண்ணப்படும்.
  • 18 : அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
  • 19 : சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
  • 20 : கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.
  • 21 : ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர் நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.
  • 22 : ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.
  • 23 : அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.
  • 24 : வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.
மேல்