×

நியாயாதிபதிகள் : 9

  • 1 : யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
  • 2 : யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன்மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகள் கேட்கப் பேசுங்கள். நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
  • 3 : அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.
  • 4 : அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்த எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரை சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
  • 5 : அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலை செய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.
  • 6 : பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
  • 7 : இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
  • 8 : விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படிபோய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 9 : அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என் கொழுமையை விட்டு, மரங்களை அரசாளப் போவேனோ என்றது.
  • 10 : அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 11 : அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
  • 12 : அப்பொழுது மரங்கள் திராட்சசெடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 13 : அதற்குத் திராட்சச்செடி தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
  • 14 : அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
  • 15 : அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுருமரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.
  • 16 : என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.
  • 17 : நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள்.
  • 18 : இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமுமான செய்கையாயிருக்குமானால்,
  • 19 : நீங்கள் யெருபாகாலையும், அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவருக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.
  • 20 : இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொல்லி,
  • 21 : தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான்.
  • 22 : அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டபின்பு,
  • 23 : அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார்.
  • 24 : யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேமின் பெரிய மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம்பண்ணினார்கள்.
  • 25 : சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
  • 26 : ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி,
  • 27 : வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சத்தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக் குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.
  • 28 : அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய எமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?
  • 29 : இந்த ஜனங்கள்மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான்.
  • 30 : பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,
  • 31 : இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாகஎழுப்புகிறார்கள்.
  • 32 : ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்துவந்து வெளியிலே பதிவிருந்து,
  • 33 : காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
  • 34 : அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள்.
  • 35 : ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழுப்பிவந்தான்.
  • 36 : காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
  • 37 : காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்.
  • 38 : அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.
  • 39 : அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம்பண்ணினான்.
  • 40 : அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
  • 41 : அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.
  • 42 : மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
  • 43 : அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.
  • 44 : அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
  • 45 : அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.
  • 46 : அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
  • 47 : சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
  • 48 : அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன்கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
  • 49 : அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.
  • 50 : பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.
  • 51 : அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும்பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
  • 52 : அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
  • 53 : அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு எந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது.
  • 54 : உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்றுபோடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான்; அவன் செத்துப்போனான்.
  • 55 : அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள்.
  • 56 : இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
  • 57 : சீகேமின் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.