லேவியராகமம் : 18

  • 1 : பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  • 2 : நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  • 3 : நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
  • 4 : என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  • 5 : ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
  • 6 : ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
  • 7 : உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
  • 8 : உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
  • 9 : உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
  • 10 : உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
  • 11 : உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
  • 12 : உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
  • 13 : உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
  • 14 : உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
  • 15 : உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
  • 16 : உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
  • 17 : ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
  • 18 : உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
  • 19 : ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
  • 20 : பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
  • 21 : நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
  • 22 : பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
  • 23 : யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
  • 24 : இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
  • 25 : ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
  • 26 : இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
  • 27 : இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,
  • 28 : நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
  • 29 : இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
  • 30 : ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
மேல்