எண்ணாகமம் : 32

  • 1 : ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
  • 2 : ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
  • 3 : கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
  • 4 : உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.
  • 5 : உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் என்றார்கள்.
  • 6 : அப்பொழுது மோசே காத் புத்திரரையும், ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
  • 7 : கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?
  • 8 : அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
  • 9 : அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு மட்டும்போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்துக்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.
  • 10 : அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:
  • 11 : உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
  • 12 : எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.
  • 13 : அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.
  • 14 : இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர் மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.
  • 15 : நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.
  • 16 : அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காக தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.
  • 17 : நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
  • 18 : இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
  • 19 : யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.
  • 20 : அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,
  • 21 : கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களானால்,
  • 22 : அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு, நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப் பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.
  • 23 : நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
  • 24 : உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.
  • 25 : அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.
  • 26 : எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.
  • 27 : உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.
  • 28 : அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
  • 29 : காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
  • 30 : உங்களோடேகூட யுத்தசன்னத்தராய் கடந்துபோகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான்.
  • 31 : காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
  • 32 : யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.
  • 33 : அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
  • 34 : பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
  • 35 : ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
  • 36 : பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
  • 37 : ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
  • 38 : பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.
  • 39 : மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக்கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
  • 40 : அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
  • 41 : மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
  • 42 : நோபாக் போய், கேனாத்தையும் அதன் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்கு தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
மேல்