×

நீதிமொழிகள் : 23

  • 1 : நீ ஒரு அதிபதியோடே போஜனம் பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.
  • 2 : நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.
  • 3 : அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.
  • 4 : ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
  • 5 : இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.
  • 6 : வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
  • 7 : அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
  • 8 : நீ புசித்த துணிக்கையை வாந்தி பண்ணி, உன் இனிய சொற்களை இழந்து போவாய்.
  • 9 : மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.
  • 10 : பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
  • 11 : அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
  • 12 : உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
  • 13 : பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
  • 14 : நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
  • 15 : என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
  • 16 : உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
  • 17 : உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப பற்றும் பயத்தோடிரு.
  • 18 : நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
  • 19 : என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
  • 20 : மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.
  • 21 : குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
  • 22 : உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.
  • 23 : சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
  • 24 : நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
  • 25 : உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள் மகிழுவாள்.
  • 26 : என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
  • 27 : வேசி ஆழமான படுகுழி; பரஸ்திர் இடுக்கமான கிணறு.
  • 28 : அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
  • 29 : ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
  • 30 : மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .
  • 31 : மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
  • 32 : முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
  • 33 : உன் கண்கள் பரஸ்திர்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
  • 34 : நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
  • 35 : என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.