நீதிமொழிகள் : 28

  • 1 : ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்.
  • 2 : தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
  • 3 : ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
  • 4 : வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
  • 5 : துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
  • 6 : இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
  • 7 : வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
  • 8 : அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
  • 9 : வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
  • 10 : உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
  • 11 : ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
  • 12 : நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.
  • 13 : தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
  • 14 : எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
  • 15 : ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.
  • 16 : பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப்பெறுவான்.
  • 17 : இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
  • 18 : உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
  • 19 : தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
  • 20 : உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
  • 21 : முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.
  • 22 : வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்; வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.
  • 23 : தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
  • 24 : தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.
  • 25 : பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
  • 26 : தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
  • 27 : தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
  • 28 : துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
மேல்