×

சங்கீதம் : 63

  • 1 : தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
  • 2 : இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
  • 3 : ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
  • 4 : என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
  • 5 : நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
  • 6 : என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
  • 7 : நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
  • 8 : என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
  • 9 : என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
  • 10 : அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
  • 11 : ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.