- 1 : உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
- 2 : என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
- 3 : நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
- 4 : நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
- 5 : தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
- 6 : அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
- 7 : என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
- 8 : பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
- 9 : அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
- 10 : நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
- 11 : நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
- 12 : மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
- 13 : நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
- 14 : என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.
- 15 : நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
- 16 : நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
- 17 : உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
- 18 : நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
- 19 : இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள்.
- 20 : நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
- 21 : என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
- 22 : ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
- 23 : இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
- 24 : என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
- 25 : நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
- 26 : என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
- 27 : சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
- 28 : நான் போவோன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
- 29 : இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
- 30 : இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
- 31 : நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.