×

மத்தேயு : 13

  • 1 : இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
  • 2 : திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
  • 3 : அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
  • 4 : அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
  • 5 : சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
  • 6 : வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
  • 7 : சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
  • 8 : சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
  • 9 : கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
  • 10 : அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
  • 11 : அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
  • 12 : உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
  • 13 : அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
  • 14 : ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
  • 15 : இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
  • 16 : உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
  • 17 : அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  • 18 : ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
  • 19 : ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
  • 20 : கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;
  • 21 : ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
  • 22 : முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.
  • 23 : நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
  • 24 : வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
  • 25 : மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
  • 26 : பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது.
  • 27 : வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
  • 28 : அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
  • 29 : அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
  • 30 : அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
  • 31 : வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
  • 32 : அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
  • 33 : வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.
  • 34 : இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
  • 35 : என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
  • 36 : அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
  • 37 : அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
  • 38 : நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
  • 39 : அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
  • 40 : ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
  • 41 : மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
  • 42 : அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
  • 43 : அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
  • 44 : அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
  • 45 : மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
  • 46 : அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
  • 47 : அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
  • 48 : அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
  • 49 : இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
  • 50 : அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
  • 51 : பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
  • 52 : அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
  • 53 : இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,
  • 54 : தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
  • 55 : இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
  • 56 : இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
  • 57 : அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
  • 58 : அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.