- 1 : அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
- 2 : உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
- 3 : அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
- 4 : உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
- 5 : நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
- 6 : உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
- 7 : மாயக்காரரே, உங்களைக்குறித்து:
- 8 : இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
- 9 : மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
- 10 : பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
- 11 : வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
- 12 : அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
- 13 : அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
- 14 : அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
- 15 : அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
- 16 : அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
- 17 : வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
- 18 : வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
- 19 : எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
- 20 : இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
- 21 : பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
- 22 : அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
- 23 : அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
- 24 : அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
- 25 : அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.
- 26 : அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
- 27 : அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
- 28 : இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
- 29 : இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
- 30 : அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
- 31 : ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
- 32 : பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
- 33 : அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
- 34 : அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
- 35 : அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
- 36 : அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
- 37 : எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
- 38 : ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
- 39 : அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.