- 1 : பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி:
- 2 : இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.
- 3 : உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.
- 4 : கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்தது போலவே அவர்களுக்கும் செய்வார்.
- 5 : நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்ககு ஒப்புக்கொடுப்பார்.
- 6 : நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
- 7 : பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய்.
- 8 : கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
- 9 : மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து,
- 10 : அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில்,
- 11 : உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்.
- 12 : புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,
- 13 : அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.
- 14 : பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.
- 15 : கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடார வாசல்மேல் நின்றது.
- 16 : கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.
- 17 : அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.
- 18 : அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.
- 19 : இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.
- 20 : நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
- 21 : அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சிபகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.
- 22 : அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.
- 23 : அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமானதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.
- 24 : மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தபின்பு,
- 25 : மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:
- 26 : நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.
- 27 : நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!
- 28 : உங்கள் கோத்திரங்களிலுமுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
- 29 : என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
- 30 : இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.