- 1 : கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.
- 2 : ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
- 3 : அந்தப்பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.
- 4 : இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.
- 5 : அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
- 6 : இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
- 7 : கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின் மேல் அவைகளை வைத்தான்.
- 8 : மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
- 9 : அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,
- 10 : அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
- 11 : இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
- 12 : மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
- 13 : நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன் குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
- 14 : இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.
- 15 : மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
- 16 : இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,
- 17 : பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,
- 18 : பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள் மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
- 19 : பின்னும் இரண்டு வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,
- 20 : வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
- 21 : மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள்.
- 22 : ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
- 23 : அங்கியின் நடுவில் மார்க்கவசத்துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
- 24 : அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,
- 25 : பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.
- 26 : கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.
- 27 : ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
- 28 : மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
- 29 : திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.
- 30 : பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
- 31 : அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
- 32 : இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
- 33 : பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
- 34 : சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
- 35 : சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
- 36 : மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
- 37 : சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
- 38 : பொற்பீடத்தையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,
- 39 : வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
- 40 : பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,
- 41 : பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.
- 42 : கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.
- 43 : மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.