×

யாத்திராகமம் : 6

  • 1 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
  • 2 : மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
  • 3 : சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
  • 4 : அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
  • 5 : எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
  • 6 : ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
  • 7 : உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
  • 8 : ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
  • 9 : இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.
  • 10 : பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
  • 11 : நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
  • 12 : மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
  • 13 : கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.
  • 14 : அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.
  • 15 : சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
  • 16 : உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
  • 17 : அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
  • 18 : கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
  • 19 : மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
  • 20 : அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
  • 21 : இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
  • 22 : ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
  • 23 : ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
  • 24 : கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
  • 25 : ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
  • 26 : இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக் கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
  • 27 : இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
  • 28 : கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
  • 29 : கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
  • 30 : மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.