×

எசேக்கியேல் : 46

  • 1 : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
  • 2 : அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
  • 3 : தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்.
  • 4 : அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
  • 5 : ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த்தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
  • 6 : மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,
  • 7 : போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
  • 8 : அதிபதி வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப்பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
  • 9 : தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல் வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்கு வாசல்வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல்வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
  • 10 : அவர்கள் உட்பிரவேசிக்கும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படுவானாக.
  • 11 : பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.
  • 12 : அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
  • 13 : தினந்தோறும் ஒரு வயதானபழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும்.
  • 14 : அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொருபங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.
  • 15 : இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.
  • 16 : கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.
  • 17 : அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒருபங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு, திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.
  • 18 : அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
  • 19 : பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
  • 20 : அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.
  • 21 : பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
  • 22 : பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
  • 23 : இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
  • 24 : அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.