×

ஆதியாகமம் : 28

  • 1 : ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,
  • 2 : எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
  • 3 : சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி;
  • 4 : தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;
  • 5 : ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
  • 6 : ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
  • 7 : யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,
  • 8 : கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,
  • 9 : ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.
  • 10 : யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,
  • 11 : ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.
  • 12 : அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
  • 13 : அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
  • 14 : உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
  • 15 : நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
  • 16 : யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
  • 17 : அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
  • 18 : அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
  • 19 : அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
  • 20 : அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,
  • 21 : என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
  • 22 : நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக்கொண்டான்.