×

ஆதியாகமம் : 33

  • 1 : யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட வருகிற நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,
  • 2 : பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி,
  • 3 : தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான்.
  • 4 : அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
  • 5 : அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்.
  • 6 : அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
  • 7 : லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
  • 8 : அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.
  • 9 : அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.
  • 10 : அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
  • 11 : தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டு வரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
  • 12 : பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.
  • 13 : அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.
  • 14 : என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.
  • 15 : அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.
  • 16 : அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போனான்.
  • 17 : யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடுகட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.
  • 18 : யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.
  • 19 : தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய எமோரியரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு,
  • 20 : அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.