×

யோபு : 34

  • 1 : பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
  • 2 : ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
  • 3 : வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
  • 4 : நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக: நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
  • 5 : யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
  • 6 : நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
  • 7 : யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
  • 8 : அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
  • 9 : எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
  • 10 : ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
  • 11 : மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
  • 12 : தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
  • 13 : பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம்கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
  • 14 : அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
  • 15 : அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
  • 16 : உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
  • 17 : நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
  • 18 : ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ?
  • 19 : இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப் பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
  • 20 : இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
  • 21 : அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
  • 22 : அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.
  • 23 : மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
  • 24 : ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார்.
  • 25 : அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
  • 26 : அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
  • 27 : எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர்,
  • 28 : எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
  • 29 : மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
  • 30 : ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
  • 31 : நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
  • 32 : நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
  • 33 : நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால், உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
  • 34 : யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
  • 35 : புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
  • 36 : அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை.
  • 37 : தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.