×

யோபு : 8

  • 1 : அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
  • 2 : நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?
  • 3 : தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
  • 4 : உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
  • 5 : நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,
  • 6 : சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
  • 7 : உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
  • 8 : ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்துபாரும்.
  • 9 : நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
  • 10 : அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
  • 11 : சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
  • 12 : அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
  • 13 : தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.
  • 14 : அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
  • 15 : ஓருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
  • 16 : வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
  • 17 : அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
  • 18 : அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.
  • 19 : இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
  • 20 : இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
  • 21 : இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
  • 22 : உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.