×

யோசுவா : 14

  • 1 : கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,
  • 2 : ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.
  • 3 : மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்கு மாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.
  • 4 : மனாசே எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
  • 5 : கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
  • 6 : அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனாகிய எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
  • 7 : தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.
  • 8 : ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.
  • 9 : அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி, ஆணையிட்டார்.
  • 10 : இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.
  • 11 : மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
  • 12 : ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
  • 13 : அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
  • 14 : ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.
  • 15 : முன்னே எபிரோனுக்குக் கீரியாத்அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.