×

நியாயாதிபதிகள் : 1

  • 1 : யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
  • 2 : அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக் கொடுத்தேன் என்றார்.
  • 3 : அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.
  • 4 : யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
  • 5 : பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரை பெரிசியரையும் வெட்டினார்கள்.
  • 6 : அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.
  • 7 : அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
  • 8 : யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.
  • 9 : பின்பு யூதாவின் புத்திரர் மலைத் தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
  • 10 : அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்குக் கீரியாத்அர்பா என்று பேர்.
  • 11 : அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள். முற்காலத்தில் தெபீருக்குக் கீரியாத்செப்பேர் என்று பேர்.
  • 12 : அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்றான்.
  • 13 : அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அத்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.
  • 14 : அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
  • 15 : அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
  • 16 : மோசேயின் மாமனாகிய கேனானின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
  • 17 : யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.
  • 18 : யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
  • 19 : கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.
  • 20 : மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.
  • 21 : பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள்மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
  • 22 : யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.
  • 23 : யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.
  • 24 : அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
  • 25 : அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
  • 26 : அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.
  • 27 : மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் , தோரின் குடிகளையும் அதற்குஅடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
  • 28 : இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.
  • 29 : எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை. ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
  • 30 : செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
  • 31 : ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
  • 32 : ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியர் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
  • 33 : நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
  • 34 : எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.
  • 35 : எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்க வேண்டும் என்று இருந்தார்கள். ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
  • 36 : எமோரியரின் எல்லை அக்ராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.