×

எண்ணாகமம் : 28

  • 1 : கர்த்தர் மோசேயை நோக்கி:
  • 2 : எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.
  • 3 : மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
  • 4 : காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
  • 5 : போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள்.
  • 6 : இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி.
  • 7 : காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது.
  • 8 : காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
  • 9 : ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
  • 10 : நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.
  • 11 : உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.
  • 12 : போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
  • 13 : போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
  • 14 : அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்பட வேண்டும்.
  • 15 : நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
  • 16 : முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
  • 17 : அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.
  • 18 : முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
  • 19 : அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
  • 20 : அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
  • 21 : ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
  • 22 : உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
  • 23 : காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
  • 24 : இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்த வேண்டும்.
  • 25 : ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
  • 26 : அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்க வேண்டும், அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
  • 27 : அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
  • 28 : அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
  • 29 : ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
  • 30 : உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
  • 31 : நித்திய சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.