×

நீதிமொழிகள் : 4

  • 1 : பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
  • 2 : நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
  • 3 : நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
  • 4 : அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
  • 5 : ஞானத்தைச் சம்பாதி, புத்தியுயும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
  • 6 : அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
  • 7 : ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
  • 8 : நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
  • 9 : அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
  • 10 : என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
  • 11 : ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
  • 12 : நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
  • 13 : புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
  • 14 : துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
  • 15 : அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
  • 16 : பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
  • 17 : அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
  • 18 : நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
  • 19 : துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
  • 20 : என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.
  • 21 : அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
  • 22 : அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
  • 23 : எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
  • 24 : வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
  • 25 : உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாயப் பார்க்கக்கடவது.
  • 26 : உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
  • 27 : வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.