×

சங்கீதம் : 31

  • 1 : கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
  • 2 : உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.
  • 3 : என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
  • 4 : அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
  • 5 : உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
  • 6 : வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
  • 7 : உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
  • 8 : சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
  • 9 : எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
  • 10 : என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
  • 11 : என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
  • 12 : செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.
  • 13 : அநேகர் சொல்லும் அவதூறைக்கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்து கொண்டது; என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்.
  • 14 : நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
  • 15 : என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
  • 16 : நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
  • 17 : கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.
  • 18 : நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
  • 19 : உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
  • 20 : மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
  • 21 : கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
  • 22 : உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
  • 23 : கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
  • 24 : கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.