- 1 : தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
- 2 : தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.
- 3 : அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.
- 4 : தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.
- 5 : உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
- 6 : என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.
- 7 : நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
- 8 : தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)
- 9 : நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.
- 10 : சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
- 11 : நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
- 12 : நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
- 13 : எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
- 14 : நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.
- 15 : நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
- 16 : என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
- 17 : இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.
- 18 : நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்;
- 19 : எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
- 20 : நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
- 21 : தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
- 22 : உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
- 23 : ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.
- 24 : ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
- 25 : எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
- 26 : எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.