- 1 : போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
- 2 : அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
- 3 : அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்த நகோமி விற்கப்போகிறாள்.
- 4 : ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
- 5 : அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.
- 6 : அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக்கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன். நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதைமீட்டுக்கொள்ளமாட்டேன்; என்றான்.
- 7 : மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான்; இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
- 8 : அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.
- 9 : அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
- 10 : இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
- 11 : அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
- 12 : இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
- 13 : போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
- 14 : அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
- 15 : அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன். உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
- 16 : நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
- 17 : அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
- 18 : பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
- 19 : எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
- 20 : அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- 21 : சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
- 22 : ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.